அதிமுக அரசு செய்த பல சாதனைகளை தற்போது உள்ள அரசு பட்டியலிட்டுக்கொண்டே செல்வது விந்தையாக உள்ளது என்றும், எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பர மோகத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அதிமுகவின் 30 வருட ஆட்சிக் காலத்தில், தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், ஆகியவற்றோடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான குடிநீர், கல்வி, சாலை வசதிகள், வேளாண்மைத் துறை, தொழில் துறை, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் தமிழ் நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கிய பெருமைக்கு, சத்துணவு நாயகர் எம்ஜிஆரே காரணம். இதேபோல் புதிய வீராணம் திட்டம், ஏழை, எளியவர்களுக்கு நியாய விலைக் கடை மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி, தடையில்லா மின்சாரம், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா.
அவரைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டம், நெகிழி இல்லா தமிழகம், உணவு உற்பத்தியில் தொடர் சாதனை, மருத்துவத் துறையில் தொடர் சாதனை, உயர் கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை 2020-லேயே அடைந்து சாதனை, உள்ளாட்சியில் நூற்றுக்கணக்கான விருதுகள், அரசு பள்ளி மாணாக்கர்களும் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்று சாதனைகள் பல புரிந்த அதிமுக அரசை தமிழக மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
தென்றலும், வாடைக் காற்றும் வீசும் போது, இடை இடையே தோன்றும் அனல் காற்று போல, அவ்வப்போது சந்தர்ப்பவசத்தால் அமைந்த திமுக அரசு, பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளை தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள தற்போது உள்ள அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள். உதாரணமாக…
* OBC-க்கு மருத்துவ மேற்படிப்பில் 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். முதன் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்திந்திய அதிமுக-தான் வழக்கு தொடுத்தது. இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில், தாங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் திமுக-வும், பாமக-வும் பின் யோசனையுடன் தங்களை இணைத்துக் கொண்டன. (அஇஅதிமுக-வின் வழக்கு எண் – 8324, திமுக-வின் வழக்கு எண் – 8326, பா.ம.க-வின் வழக்கு எண். – 8325) சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் “ஓலா நிறுவனத்தை”, (மின்சார இரு சக்கர வாகன உற்பத்தித் திட்டம்) பதவியேற்ற 50 நாட்களில் இப்போது உள்ள அரசு கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது.
* 2019-2020ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் மாநில சுகாதாரக் குறியீடு கூட்டுக் குறியீட்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் பெரிய மாநிலங்களில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
* மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் 2020ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் அகில இந்திய அளவில் தமிழ் நாடு மூன்றாம் பரிசு மற்றும் 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதை தமிழ் நாடு பெற்றுள்ளது. இதற்கும் திமுக அரசின் முதல்வரிடம், அமைச்சர் துரைமுருகன் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதிமுக அரசு செய்த பல சாதனைகளை தற்போது உள்ள அரசு பட்டியலிட்டுக்கொண்டே செல்வது விந்தையாக உள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அதிமுக அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கட்டிடம் கட்டுவதற்கான நிதியினையும் ஒதுக்கியது.
விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு நானும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் சில மாவட்டங்களுக்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் நேரடியாகச் சென்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டோம்.
புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1,450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏற்கெனவே அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக, அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமார் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற உள்ளது.
நாளை (12.01.2022), பிரதமர் மேற்குறிப்பிட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொளி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்துவைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுக அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு அனுமதியும், மத்திய அரசின் பங்கையும் வழங்கிய பிரதமருக்கு தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை தற்போது உள்ள அரசு, தான் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதற்கு அனைத்திந்திய அதிமுக சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன். இனியாவது “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்”, எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.