தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
துறைமுகத்தில் மூன்று ஷிப்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் பணிக்குச் செல்லவில்லை. கப்பல்களில் சரக்குகளை ஏற்றுதல் மற்றும் இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை இறக்கும் பணி மட்டும் பாதிப்பின்றி நடைபெற்றது.
இந்நிலையில், காற்றாலை இறக்கைகளை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. கப்பல் கட்டப்பட்டிருந்த கயிறை எடுத்துவிடுமாறு, தொழிலாளர்களிடம், கப்பல் ஊழியர்கள் கூறினர். ஆனால், வேலைநிறுத்தம் காரணமாக கயிறை எடுக்க முடியாது என தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.
அங்கிருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கயிறை எடுத்துவிட முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 தொழிலாளர்கள் கடலில் குதித்து கப்பலுக்கு முன்பாக மிதந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்திகப்பல் உடனடியாக புறப்பட்டுச் செல்லும் முயற்சி கைவிடப்பட்டது.
மாலை 6 மணிக்கு மேல் கப்பலை எடுத்துச் செல்ல ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர். இதனால், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.