ராமநாதபுரம்: ராமநாதபுரத்துக்கு முதல்வர் வருகையை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பகுதியில் நிரப்பு வதாகக்கூறி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டு விட்டதாகவும், மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் ஆக. 17-ம் தேதி தென்மண்டல அளவிலான திமுக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் மண்டபம் கலோனியர் பங்களா அருகே மீனவர் மாநாடும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் திறந்த வெளியிலும், மண்டபம் கலோனியர் பங்களா அருகேயும் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பந்தல் அமைக்கும் இடங்களில் அருகிலுள்ள பகுதிகளில் மணல் எடுக்கப்பட்டு அங்கு நிரப்பப்படுகிறது. முதல்வர் வருகையை பயன்படுத்தி பேராவூர் பழங்குளம் கண்மாயில் மண் எடுப்பதாக கூறி, திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து வருவாய்த் துறையினர் அங்கு மண் எடுப்பதை நிறுத்திவிட்டனர்.

மண்டபம் விழா நடக்கும் இடத்துக்காக நொச்சியூரணி பகுதியில் கட்டு மண் எனக்கூறும் வெள்ளை மணல் எடுக்கப்பட்டது. ஆனால், இதைப் பயன்படுத்தி ஆறு யூனிட் கொண்ட ஒரு லாரி லோடு வெள்ளை மண்ணை ரூ.30,000-க்கு வெளியில் விற்று மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் நொச்சி யூரணியில் மணல் எடுக்கும் பகுதிக்கு, பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் பாஜகவினர் நேற்று சென்று பார்வையிட்டு, கனிமவள அதிகாரிகளிடம் மணல் திருட்டை நிறுத்த வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் கூறியதாவது: முதல்வர் வருகையை மையமாக வைத்து ஆளுங்கட்சியினர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். நொச்சியூரணி பகுதியில் வெள்ளை மணலை எடுத்து ஏராளமான லோடுகள் வெளியில் விற்று வந்தனர். இதற்கு கனிம வளம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.

இந்நிலையில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கனிமவள அதிகாரியிடம் மனு அளித்தோம். பாஜகவினரின் போராட்டத்தை தொடர்ந்து மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் கூறியதாவது: பேராவூர் கண்மாயில் அனுமதியின்றி மண் எடுத்தது தெரிய வந்தது. அது உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டபத்தில் முதல்வர் பங்கேற்கும் மேடை பகுதியில் நிரப்புவதற்காக நொச்சியூரணியில் தனியார் பட்டா நிலத்தில் 2 நாட்களுக்கு மட்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஒரு நாள் எடுத்த நிலையில் புகார் எழுந்ததால் நேற்று முன்தினம் மாலை மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. மேலும் மணல் திருட்டு நடந்திருப்பதாக புகார் எழுந்ததால், விசாரணை செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.