கோவை / பொள்ளாச்சி: கோவை வடவள்ளி பகுதி திமுக செயலாளராக இருப்பவர் வ.ம.சண்முக சுந்தரம். இவர், வடவள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அதில், ‘‘பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், கோவை வி.கே.கே.மேனன் சாலையில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான வானதி சீனிவாசன், திமுக பிரதிநிதிகளையும், திமுக-வைச் சேர்ந்த பெண்களையும் தவறாக சித்தரிக்கும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் நோக்கத்துடன், அவதூறாக பேசிய வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். இதேபோல பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் மணிமாலா ஆகியோர் மகாலிங்கபுரத்திலுள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.