தமிழக அரசு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் குடியாத்தம், திருவாரூர் மன்னார்குடி, ராணிப்பேட்டை அரக்கோணம், மதுரை திருமங்கலம் ஆகிய இடங்களில் ரூ.9.86 கோடியில் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளளன.

இதேபோல, ஆரணி, குடியாத்தம், அரக்கோணம், திருமங்கலத்தில் ரூ.1.49 கோடியில் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

வேலூர் கே.வி.குப்பம், குடியாத்தம், திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, புதுக்கோட்டை அறந்தாங்கி, ஆவுடையார்கோவிலில் ரூ.14.77 கோடியில் வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.

திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, திருவாரூர் மன்னார்குடியில் ரூ.55 லட்சம் மதிப்பில் வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் ரூ.26 கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

மேலும், மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்தவளாகம் 2,84,946 சதுர அடிபரப்பில், தரை மற்றும் 7 தளங்களுடன், 63 துறைகளுக்கான அலுவலகங்களைக் கொண்டதாக கட்டப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், சா.மு.நாசர், எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, ஆர்.காந்தி, பி.மூர்த்தி, சிவ.வீ.மெய்யநாதன், பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், சமூகபாதுகாப்புத் திட்ட ஆணையர் ந.வெங்கடாசலம் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here