ஏழைகளுக்கு உதவி செய்துவிட்டு அதை விளம்பரம் மூலம் பெருமை தேடிக் கொள்வோர் மத்தியில், எவ்வித விளம்பரமும் இல்லாமல் தனது சேமிப்பை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பி.எஸ்.எப்.) குழந்தைகளின் உயர் கல்விக்காக வழங்குகிறார் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை டி.சரஸ்வதி.

ராணுவம் என்பது தரைப்படை, விமானப்படை, கப்பற்படை என மூன்றையும் உள்ளடக்கியது. ஆண்டு முழுவதும் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள். ஆனால், ராணுவ வீரர்கள் போல எல்லைப்பாதுகாப்புப்படையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை கிடையாது. மருத்துவம், ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகளும் இல்லை. உயிரிழந்த வீரரின் மனைவி அல்லது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பும் இல்லை.

போரில்லாத காலங்களில்… போர் ஏற்படும்போது நாட்டைக் காப்பதுதான் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பிரதான வேலையாகும். போர் இல்லாத காலங்களில் நாட்டின் உள்பகுதிகளில், நகரங்களில் உள்ள முகாம்களில் பயிற்சி, ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். கடைசியாக 1999-ல் கார்கில் போர்நடைபெற்றது. அதன்பிறகு பெரியபோர் நடைபெறவில்லை. போர் இல்லாத காலங்களில் மழை, வெயில், பனி என்றும் பாராமல் ஆண்டு முழுவதும் நாட்டின் எல்லையை பாதுகாக்கின்றனர்.

 

 

எல்லைப் பிரச்சினையில் உயிரிழக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதுபற்றி பொதுமக்கள் மத்தியிலும் அரசு மட்டத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் பலர் உயிரிழந்ததும், ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்தும் அவதிப்படுவது பலருக்கும் தெரிந்திராத உண்மை.

ஆசிரியை டி.சரஸ்வதி

எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விடுமுறை. தனது பணிக்காலம் முழுவதும் குடும்பத்தை தன்னுடன் அழைத்துக் கொண்டு போகமுடியாது. இந்நிலையில், இதுதொடர்பான டாக்குமெண்டரியை ஜியோகிரோபி சேனலில் பார்த்துள்ளார் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை டி.சரஸ்வதி. பின்னர் நடந்ததை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

 

 

தியாகமும் அர்ப்பணிப்பும்: இந்த டாக்குமெண்டரியைப் பார்த்தபோதுதான் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் குறித்த விவரங்களை சேகரித்தேன். அப்போதுதான்எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தியாகங்களும், அர்ப்பணிப்பும் இரண்டு தலைமுறைகள் கடந்தும் முழுமையாக வெளியே தெரியாமல் இருப்பதை உணர்ந்தேன். அரசு பாரபட்சம் காட்டுவதால் இவர்களுக்கு தன்னால் ஆனதை செய்ய வேண்டும் என்ற எண்ணினேன்.

முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் இலவசகல்வி வழங்கப்படுவதால், உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவதிட்டமிட்டேன். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் டி.சரஸ்வதி இளஞ்செழியன்கல்வி அறக்கட்டளை தொடங்கி70-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி வருகிறேன். இப்போது புதிதாக தொடங்கி உள்ள டி.சரஸ்வதி இளஞ்செழியன் எல்லை வீரர்கள் கல்வி அறக்கட்டளை மூலம் 4 மாணவர்களின் உயர்கல்விக்கு வரும் கார்கில் போர்நினைவுநாளில் உதவி தொகை வழங்கவுள்ளோம்.

கொடி விற்பனையின் (Flag dayfund) மூலம் திரட்டப்படும் நிதிதான் தியாக உணர்வுடன் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பி.எஸ்.எப்.படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்பு களை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணி களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கொடி நாளில் தாராளமாக நிதி வழங்க வேண்டும்.

என்னுடைய சேமிப்பை பிஎஸ்எப் படைவீரரின் குழந்தைகள் மேற்படிப்புக்காக வழங்குவதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளேன். இது நாட்டிற்காக எல்லையில் உயிர்த்தியாகம் செய்த எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குச் சமர்ப்பணம் என்று நெகிழ்வுடன் தெரிவித்தார் முன்னாள் ஆசிரியை சரஸ்வதி.