தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன்.

அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! pic.twitter.com/8ALfypb2Uh

— M.K.Stalin (@mkstalin) January 11, 2022

முன்னதாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.10) தொடங்கி வைத்தார்.

மக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தமிழகத்தை தொற்று பாதிப்பு இல்லாதமாநிலமாக உருவாக்கவும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசிசெலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை மொத்தம் 8.83 கோடிகரோனா தடு்ப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 17 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 3.15 கோடிபேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும்சிறப்பு முகாமை ஜன.3-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். அதில் 33.46 லட்சம் பயனாளிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 21 லட்சத்து 52,755 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், மனநலம்பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறப்புக் கவனம் அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 5 லட்சத்து 65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9 லட்சத்து 78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20 லட்சத்து 83,800 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தகுதியான 2 லட்சத்து 6,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 1,069 இணை நோய் உள்ளவர்கள் என 4 லட்சத்து 13பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை எம்ஆர்சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.