கோவை: பெட்ரோல், டீசல் விலையேற்றத் துக்குப்பிறகு மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்ய வேண்டும். இந்த திறனுக்கு கீழ் உள்ள மின்சார வாகனங்களை பதிவு செய்ய தேவையில்லை.

அதன்படி, கோவை தெற்கு, வடக்கு, மையம், மேற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 2020-21-ம் நிதி யாண்டில் 2,242 மின்சார இருசக்கர வாகனங்களும், 554 மின்சார கார்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 2021-22-ம் நிதியாண்டில் 5,044 இருசக்கர வாகனங்களும், 1,556 கார்களும் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப் படும் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை இருமடங்குக்கு அதிகமாகவும், கார் எண்ணிக்கை மும்மடங்கும் ஓராண்டில் அதிகரித்துள்ளது. இதற்கு, எரிபொருள் விலையேற்றம் தவிர, மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் சலுகை களும் காரணம் ஆகும்.

ஊக்குவிக்கும் மத்திய அரசு

இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ‘எஃப்எம்இ-2’ என்ற திட்டத்தை 2019-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு கிலோவாட் (பேட்டரி திறன்) ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படு கிறது. அதன்படி, மின்சார வாகனத் தின் விலையில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை ஊக்கத்தொகையாக பெறலாம்.

எந்தெந்த நிறுவனத்தின், எந்தமாடல் வாகனத்துக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதை https://fame2.heavyindustries.gov.in/ModelUnderFame.aspx என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். அரசு குறிப்பிட்டுள்ள மாடல் மின்சார வாகனத்தை வாங்கும்போதே மொத்த விலையில் ஊக்கத்தொகையை கழித்து விலைகுறைப்புடன் வாகனத்தை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வாகன பதிவின்போதும் சலுகை

மின்சார வாகனங்களை பதிவு செய்வதற்கும் கட்டண சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறும்போது, “தற்போது மொத்த வாகன பதிவில் சராசரியாக 5 முதல் 10 சதவீதம் வரை மின்சார வாகனங்கள் பதிவாகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, வாகனத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் கீழ் இருந்தால், அதன் மதிப்பில் 10 சதவீதமும், வாகனத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்தால், வாகன மதிப்பில் 15 சதவீதமும் சாலை வரியாக செலுத்த வேண்டும். இருசக்கர வாகனமாக இருந்தால் அதன் மதிப்பில் 8 சதவீதத்தை சாலை வரியாக செலுத்த வேண்டும். இதுதவிர, சாலை பாதுகாப்பு கட்டணம், வாகன பதிவு கட்டணம், சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

ஆனால், மின்சார வாகனங்களுக்கு இவை அனைத்திலும் இருந்து மத்திய, மாநில அரசுகள் விலக்கு அளித்துள்ளன. ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் அளிக்கப்படும் பதிவு அட்டையை பெற மட்டும் உரிமையாளர் ரூ.200 செலுத்தினால் போதும். உதாரணமாக, ஒருவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கினால் அவருக்கு வரி, இதர கட்டணங்கள் என ரூ.9,000 வரை மிச்சமாகும்” என்றனர்.