பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காண்பித்துக் கொள்ளும் திமுக. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்களை வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அந்தப் பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், 2022-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளுக்கு துணிப் பையுடன் கூடிய வெறும் 21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததையடுத்து, நானும் அந்தக் குளறுபடிகளை 7-1-2022 நாளிட்ட எனது அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டினேன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை என்று குறிப்பிட்டு 9-1-2022 அன்று ஒரு செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வெளியீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை முதல்வரே நேரில் ஆய்வு செய்ததாகவும்; மக்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றி சிலர் தவறான, விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருவதாகவும்; அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல் தவறான கருத்துகளை யாரும் பரப்பியதாகத் தெரியவில்லை. தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளைத்தான் மக்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளை சமைத்து சாப்பிட்டதில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட குறைகளில் துணிப்பை பற்றாக்குறை என்பதை அரசே ஒப்புக் கொண்டுவிட்டது.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல மக்களின் மற்ற குறைகளை தட்டிக்கழிக்க முடியாது. அரசு எந்தப் பொருள்களை கொள்முதல் செய்து விநியோகம் செய்கிறதோ அதைத்தான் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வழங்குகின்றனர். எனவே, அவர்களை குறைசொல்வதில் எவ்விதப் பயனும் இல்லை. இந்த அரசு பொறுப்பேற்றவுடன், 4,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 14 அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கியது. அப்போது யாராவது குறை சொன்னார்களா என்றால் இல்லை. ஏனெனில், அப்போது குறையில்லை, இப்போது குறை இருக்கிறது.

அதைத்தான் சொல்கிறார்கள். இதிலே மற்றுமொரு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆட்டா மாவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள Surya Wheat Roller Flour Mills என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பொட்டலத்தில் இந்தி, ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ரவை உத்தரப்பிரதேச மாநிலம் ரைபரேலியில் உள்ள Kanha Flour Mills Pvt. Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. தமிழில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மிளகாய் தூள் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரிலுள்ள Suruchi Spices Pvt. Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழியும், ஆங்கில மொழியும் தான் இடம் பெற்றுள்ளது. தமிழ் வார்த்தையே இல்லை. உப்பு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள RKBK Ltd. என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் தமிழ் வார்த்தை தென்படவில்லை. மாறாக ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்று இருக்கின்றன. மல்லித்தூள், கடலை பருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள BMI Food Products நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கடுகு குஜராத் மாநிலம் உஞ்சாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. பாதி பொட்டலங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கான விவரம் இல்லை. நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தித் திணிப்பு என்று கூறும் திமுக. தமிழக மக்களின் வரிப் பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதும், அந்தப் பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம்?

இந்தித் திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா? அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா? தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா? இது தமிழ் மொழியையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா? எந்த அடிப்படையில் பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது? தமிழ்நாட்டு நிறுவனங்கள் லாபம் அடையக்கூடாதா? பொருட்களுடன் துணிப்பை ஏன் வழங்கப்படவில்லை? இவற்றிற்கான பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா? கொடுக்கப்பட்டுவிட்டது என்றால் எவ்வளவு கொடுக்கப்பட்டது? மீதி எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் நான் கேட்கவில்லை, தமிழக மக்கள் கேட்கிறார்கள்.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பது தான் யதார்த்தம். இதைவிட ரொக்கமாக 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தத் திட்டத்தினால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. பயனாளிகள் யார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மொத்தத்தில், இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி சேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளது.

இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், மக்கள்படும் அவதி, மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. பொங்கல் தொகுப்பு குறித்த மக்களின் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.