வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 22 புதிய கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனுமதி அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. விழாவுக்கு அனுமதி கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கரோனா தொற்று பரவல் அச்சத்தால் விழா நடத்த தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழாக்களை நிபந் தனைகளுடன் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 22 கட்டுப்பாடுகளுடன் எருது விடும் விழா நடத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனுமதி அளித்துள்ளார். அதில், காளையின் உரிமையாளர், ஒரு உதவியாளர் என இருவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு மட்டுமே வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய முடியாது.

போட்டியில் பங்கேற்கும் காளை களின் பதிவுகளை 3 நாட்களுக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். காளையின் உரிமையாளர், உடன் வரும் உதவியாளர் பெயரை பதிவு செய்ய வேண்டும். எருது விடும் விழா 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படும். எருது விடும் விழாவில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 2 நாட்களுக்கு முன்பாக கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.

விழா அரங்குக்கு வெளியே பார்வையாளர்கள் 150 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். விழா நடத்த அரசின் முன் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விழாக்குழுவினர் முன் எச்சரிக்கை காப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் என்ற பெயரில் இந்தியன் வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விழாவுக்கான மொத்த நிகழ்ச்சியும் காப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஆவணத்தை வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும். ரூ.1 கோடிக்கான காப் பீட்டுத் தொகையாக ரூ.11,840-ம், எருதுகளுக்கு ரூ.75 ஆயிரத்துக் கான காப்பீட்டுத் தொகையாக ரூ.3,611 செலுத்த வேண்டும். எருது விடும் விழாவில் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு தலா ரூ.5 லட்சம், எருதுகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

எருதுவிடும் விழா நிகழ்ச்சி யின்போது ஏற்படும் அசம்பா விதங்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரத்தை விழாக்குழுவினர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சமர்ப்பிக்க வேண்டும். விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விழா நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் திறந்தவெளி கிணறுகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து மூட வேண்டும். ரயில்வே தண்டவாளங்கள், எரி வாயு கிடங்குகள், பெட்ரோல் பங்க், மின்மாற்றிகள், சாலைகளின் குறுக்கே செல்லும் வயர்கள் எதுவும் இல்லை என்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். விழா நிகழ்ச்சி முழுவதையும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அரசால் அறிவிக்கப்படும் முழு ஊரடங்கு காலங்களில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி இல்லை. எருது விடும் விழாவை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டுதலை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.