சென்னையில் பூஸ்டர் தடுப்பூசி போட 73 ஆயிரம் பேர் தகுதிவாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய முன்களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள 1913, 044-25384520 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் 2-வது தவணை கரோனா தடுப்பூசியை செலுத்தி 9 மாதங்களை கடந்த 73 ஆயிரம் முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். முதல் நாளில் 1,041 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
60 வயதை கடந்த இணை நோயுள்ள மூத்த குடிமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லலாம். அதற்கு மருத்துவ பரிந்துரை சான்றிதழ்கள் தேவையில்லை.
இணை நோயுள்ள மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு செலுத்த முடியும். அவற்றுக்கு தேவையான போதுமான அளவு பூஸ்டர் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.