சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்கச் செலவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சுற்றுலா செல்பவர்கள் தங்கள் பயண பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்கச் செலவிட வேண்டும் என ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த தொகை உங்களுக்கு பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது அந்த இடத்தின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு கும்ப மேளா நடைபெற இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு இது மிக முக்கியமானது.

 

 

வரும் காலங்களில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை மூலம் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. ஏனெனில், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் வாரணாசிக்கும் அயோத்திக்கும் வர விரும்புகிறார்கள். சிறு தொழில்முனைவோர், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக கணிக்க முடியாத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இரட்டை இன்ஜின் ஆட்சியின் கீழ், முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகளை முன்னிறுத்துவது என்ற நிலையில் இருந்து சிகப்பு கம்பளங்களை விரிப்பது எனும் நிலைக்கு உத்தரப் பிரதேசம் மாறி இருக்கிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதோடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருக்கிறது.

இந்திய அரசின் கொள்கை மற்றும் நிலைத்தன்மை மீது சர்வதேச முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயங்களில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதை தவிர்க்கும் ஒரு வழக்கம் உண்டு. ஆனால், தற்போது அந்த வழக்கம் உடைந்து நொருங்கி உள்ளது” என தெரிவித்தார்.