இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை தொட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொதித்தெழுந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலகும்படி வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் இரவு, பகலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், கோத்தபயா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 75 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 303 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 338 ரூபாயாக அதிகரித்துள்ளது.
214 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வந்த 1 லிட்டர் டீசல் விலை, 289 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்கனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள், இந்த திடீர் விலையேற்றத்தால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்படும் என முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.செவ்வாய்கிழமை தொடங்கும் கூட்டத்தொடரில் கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும், இன்றைய ஆலோசனை கூட்டத்தில் அது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.