சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் அரசு நடவடிக்கைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு என்பது பிஸினஸ்தான். ஆம்னி பஸ் முதலாளிகளுக்குத்தான் லாபம் கிடைக்க அரசு உதவி செய்கிறது. ஆம்னி பஸ்களுக்கு விழாக் காலத்தில் நல்ல வருமானம். ரூ. 4 ஆயிரம் டிக்கெட் கொடுத்து ஊருக்கு போய்வந்தால் ஊரில் போய் கொண்டாட சாமான்யர்கள் கையில் என்ன இருக்கும். மற்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் போது பண்டிகை காலங்களில் மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது ஏன்? எல்லாமே ஒரு வியாபாரமாக தான் நடைபெறுகிறது. அரசும் வியாபார ரீதியாக செயல்படுகிறது. மக்களுக்கான அரசாக இல்லை. இது கண்டனத்திற்குரிய விஷயம். அரசு பஸ்களை தரம் உயர்த்தினால் அனைவரும் அரசுப் பேருந்துகளிலேயே செல்வார்களே. அதை ஏன் செய்யவில்லை. அரசுப் பேருந்து, அரசு மருத்துவமனைக்கு மக்கள் செல்லாததற்குக் காரணம் தரம் இல்லாமல் போனது தான்.
தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்துள்ளார். குண்டு வீச்சு யாரு செய்திருந்தாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு வருத்தமான விஷயம். தமிழகத்தில் தான் இருக்கிறோம் என்ற சூழ்நிலை உள்ளது. ஆர்எஸ்எஸ், விசிக இருவரின் பேரணியுமே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு முன் அனைவரும் தலை வணங்க வேண்டும். அரசாங்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை நாம் வரவேற்க வேண்டும்.
அதிமுகவினர் ஒரு மூதாட்டியை வைத்து இலவசப் பேருந்து பயணத்திற்கு எதிராக விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பெண்கள் ஓசியில் போகிறார்கள் என திமுகவினரே கூறுகிறார்கள். மக்கள் இதை உணர வேண்டும் ஓசியில் பயணம் வேண்டாம் என அந்த பெண்மணி கூறியது போல் ஒட்டுமொத்த பெண்களும் கூற வேண்டும். ஓசி பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்க சில்லறை மாற்றுவதாகக் கூறுகிறார்கள். வெற்றி பெறுவதற்கு முன் ஒரு நிலைப்பாடு வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் உள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் தான் அரசுப் பேருந்து ஓடுகிறது. அமைச்சர் சொந்த பணத்திலா ஓடுகிறது. தமிழக மக்கள் அரசு பேருந்து பயணத்தை நிராகரித்து அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என செங்கலை வைத்து உதயநிதி அரசியல் செய்தார். நாட்டா எய்ம்ஸ் குறித்து அறிவித்து என்ன செய்தார். வெறும் அறிவிப்பாகவே உள்ளது சென்னைக்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பெரிய நகராக மதுரை உள்ளது. சொன்னதுபோல் விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்க வேண்டும் எனக் கேட்கிறோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.