நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாககூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் விட்ஜா சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்தி, பதில் அளிக்குமாறு சைபர் பிரிவுக்கு உத்தரவிட்டது.

வீடியோகால் மூலம் விசாரணை

இதனடிப்படையில், ஆர்யாவிடம் நேரடியாகவும், புகார் அளித்த பெண்ணிடமும் விடியோகால் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஆர்யா என்ற பெயரில் அந்தப் பெண்ணிடம் பேசி, ரூ.70 லட்சம் மோசடி நடைபெற்றது. உறுதி செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில், சென்னை புளியந்தோப்பு முகமது அர்மான்(32) என்பவர் மோசடியில் ஈடுபட்டதும், அவரது உறவினர் முகமது ஹூசைனி பையாக்(34) உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.