தனது புதிய காரின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக காவல் துறையிடம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் உள்ளார். இவர் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெயக்குமாரின் பிறந்தநாளையொட்டி கூடப்பாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க இன்று சென்றிருந்தார். பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று விட்டு, அதே பகுதியில் உள்ள சிவாலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்பு வெளியே வந்து பார்த்தபோது அவரது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவர் தனது காரின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டுள்ளதாக வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி சாமிநாதன் கூறுகையில், ”நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு, அங்குள்ள கோயிலில் நடந்த அன்னதான நிகழ்வில் பங்கேற்றேன்.

பின்பு வெளியே வந்து பார்த்தபோது கோயில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. நான், என்னுடைய பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட அனைவரும் கோயினுள் இருநதோம். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் யாரோ கல்வீசி உடைத்துள்ளனர். 5 கார்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எனது புதிய காரின் கண்ணாடி மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் தந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கேட்டபோது, ”கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் வந்தது. நாங்கள் விசாரித்தபோது பட்டாசு வெடித்தபோது கல்பட்டு கண்ணாடி உடைந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இதுவரை எங்களுக்கு புகார் வரவில்லை” என்றனர்.