பழநி பள்ளிவாசல் மயானத்தை சீரமைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவுக்கு வருவாய்த் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநியைச் சேர்ந்த முகமது அலி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசல் உள்ளது. இதற்கு சொந் தமாக மயானம் உள்ளது. இங்கு உடல் அடக்கத்துக்காக குழி தோண்டியபோது 4 அடியில் தண்ணீர் வெளியானது. இதனால் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் நீண்ட நாட்களாக மட்கிப் போகாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் மயானத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு இந்து முன்னணியினர், பாஜக வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே பள்ளிவாசல் மயா னத்தின் உயரத்தை அதிகரிக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப் பில், பழநி நகராட்சி அனுமதி பெற்றே மயானத்தில் பணிகள் நடைபெறுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் மயானத்தில் பணி நடைபெறும் இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. அங்கு பணி மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கு நகராட்சிக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வருவாய்த் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.