பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும்,பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தாக்கத்துக்குப் பிறகுபயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போன்று மாநகர பேருந்துகளில் பயணிகள் வருகை இல்லை. பேருந்துகளில் நகை, செல்போன் உள்ளிட்டவை திருட்டு போனால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பயணிகள் மூலம் புகார் கொடுக்க நடத்துநர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தினோம். இருப்பினும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் திட்டத்தின் முன்னோட்டமாக சென்னையில் 21ஜி, 18பி, 23சி, 29சி உள்ளிட்ட வழித்தடங்களில் சில பேருந்துகளில் பொருத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனை முயற்சி திருப்தியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் நவம்பர் இறுதிக்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை நிறைவு செய்யவுள்ளோம். இந்த கேமராக்களை இணைத்து ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் பல்லவன் இல்லத்தில் சிறப்பு மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்.