இப்போது தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் எத்தனையோ அவதாரமெடுத்து அதிமுகவை அழிக்கப் பார்த்தார். அத்தனை அவதாரங்களையும் தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக” என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக் கட்சியினர், அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக வீழ்ந்துவிட்டது, அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சேர்த்து 40 இடங்களிலும் வெல்வோம் என்று சொல்கிறார்.

எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும், அதிமுகவை வீழ்த்துவதற்கு உங்களுக்கு சக்தி கிடையாது. தமிழகத்தில் அதிமுகவைக் கண்டால், மற்ற கட்சிகள் அஞ்சுகின்ற நிலையைப் பார்க்கின்றோம்.

இப்போது தமிழகத்தை ஆளுகின்ற முதல்வர் எத்தனையோ அவதாரமெடுத்து அதிமுகவை அழிக்கப் பார்த்தார். அத்தனை அவதாரங்களையும் தவிடுபொடியாக்கியக் கட்சி அதிமுக. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். சரித்திர சாதனையைப் பெறுவோம். முதல்வர் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது.

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காலையில் நான் கண்விழித்து பார்க்கும்போது, ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் எழுந்து பார்ப்பதாக கூறுகிறார். அப்படியென்றால், அவருடைய நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கண்விழிக்கும்போது அவரது கட்சிக்காரர்களைப் பார்த்து பயப்படும் நிலைக்கு முதல்வர் சென்றுவிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.