மரியாதையுடன் அழைத்தும் அதிமுகவினர் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆக. 03) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும், கருணாநிதி படத்திறப்பு விழாவிலும் அதிமுக கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து துரைமுருகன் பேசியதாவது:
“சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும், கருணாநிதி படத்திறப்பு விழாவிலும் அதிமுகவினர் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சி கலந்துகொள்வதும் கலந்து கொள்ளாததும் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக கலந்து கொள்ளவில்லை. எனவே, இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஆனால், ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பிதழை மட்டும்தான் அனுப்பிவைத்தனர். ஆனால், நாங்கள் அப்படியல்ல. இந்த விழாவைக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டபோதே, முதல்வர் என்னை அழைத்து எதிர்க்கட்சியினரின் தோழமையுடன் இந்த விழா நடைபெற வேண்டும், எனவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரைத் தொடர்புகொண்டு அவரிடம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும், மேலும், குடியரசுத் தலைவர், ஆளுநர் எல்லோரும் அமர்ந்திருக்கும் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படும், அவரும் வாழ்த்துரைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.
உடனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டேன். நீங்கள் வரவேண்டும் என்று முதல்வரும், நாங்களும் விரும்புகிறோம். சரிசமமாக அமர்ந்து இந்த விழா குறித்து வாழ்த்துரைக்க வேண்டும், தவறாமல் வரவேண்டும் எனக் கூறினேன்.
அப்போது, ‘காரில் சேலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறேன். பின்னர், யோசித்து, கலந்தாலோசித்துச் சொல்கிறேன்’ என்றார். அப்போதும், ‘நீங்கள் சொன்னால் கேட்க மாட்டார்களா?’ எனக் கேட்டேன். அதற்கு, ‘நான் சென்று கலந்து பேசித் தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.
ஆனால், அவர் விழாவுக்கு வரவில்லை என அழைத்த என்னிடம் சொல்லவில்லை. சட்டப்பேரவைச் செயலாளரிடம் வரவில்லை எனச் சொல்லியிருக்கிறார். நான் வற்புறுத்தி மீண்டும் அழைப்பேன் எனக் கருதி என்னிடம் சொல்லவில்லை. நானோ, பதில் வரவில்லை எனக் காத்துக்கொண்டிருந்தேன். பின்னர், சட்டப்பேரவைச் செயலாளர்தான் என்னிடம் கூறினார்.
முழு மனத்துடன் வர வேண்டும் என மரியாதையுடன் அழைத்தோம். எங்களை அப்படி அழைக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அழைப்பிதழை அனுப்பினார்கள். எதிர்க்கட்சிக்கு மரியாதை இல்லாததால் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. உரிய மரியாதை தரப்படும் எனத் திருப்பித் திருப்பிக் கூறியும் அதிமுக வரவில்லை, பதிலும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லும் சமாதானம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல”.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.