சிபிஎஸ்இ 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 20 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டது. அதில், பிளஸ் 2 மாணவர்களுக்குக் கடந்த 30-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்தம் 99.37% பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 20,97,128 பேர் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த நிலையில், 20,76,997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 99.4% ஆக உள்ளது. 98.89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16,639 பேரின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாணவர்கள் தங்களின் பதிவெண்ணைக் குறிப்பிட்டுத் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதேபோல மத்திய அரசின் digilocker.gov.in, UMANG மற்றும் DigiLocker செயலிகளிலும் தேர்வு முடிவுகளைக் காண முடியும்.

பதிவெண்ணை முன்கூட்டியே அறியாதவர்கள் https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx என்ற இணைய முகவரியில் தங்களின் பதிவெண்ணைக் கண்டறியலாம்.

கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம்

2020 – 91.34%
2019 – 91.1%
2018 – 86.07%

சிபிஎஸ்இ நிர்வாகம் நாடு முழுவதும் 16 மண்டலங்களாக இயங்கி வருகிறது. சென்னை மண்டலத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய பகுதிகள் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மண்டல வாரியான தேர்ச்சி வீதங்கள் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு மண்டல வாரியாகத் தேர்ச்சி வீதங்கள் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.