கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் நடைபெற்ற டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் வரும் 26-ம் தேதி அன்று நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியிலும், வரும் ஏப்ரல் 5-ம் மற்றும் 6-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வது, போராடி வரும் விவசாயிகளுக்கு தெரியாமல் மோசடியாக வங்கியில் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை உடனடியாக திரும்பச் செலுத்தி கடன் இல்லா சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது, “ தமிழக அரசு தீர்வுகாண வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்களித்த விவசாயிகளைத் தமிழக முதல்வர் வஞ்சிப்பது நியாயமா. மேலும், இந்த ஆலை போல், தரணி சர்க்கரை ஆலையிலும் விவசாயிகளின் பெயரில் கடன்களை வாங்கி சுமார் ரூ. 1000 கோடி மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.
இப்பிரச்சனைக்கு தமிழக அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். இவர்களது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக வரும் பிப்ரவரி 2-வது வாரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கரும்பு விவசாயிகளை திரட்டி, தனியார் சர்க்கரை ஆலைகளின் கடன் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும், தமிழக அரசு கருப்புக்கான பரிந்துரை விலை அறிவிக்க வேண்டும், வருவாய் பங்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து, மூடப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலுள்ள சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருமண்டங்குடியில் 54-வது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, அனைத்து மாநில நிர்வாகிகளும் கண்டன முழக்கமிட்டனர்.