சென்னை: வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக திகாயராய நகர் பேருந்து நிலையம் உருவெடுக்க உள்ளது. பொதுவாக பேருந்து நிலையங்கள் வாகன போக்குவரத்து வசதிக்காக ஊருக்குவெளியில்தான் அமைக்கப்படும். நகரமயமாதல் காரணமாக நகரப்பகுதி வேகமாக வளர்ந்து அதிக குடியிருப்புகள் வந்ததால் ஒதுக்கு புறமாக இருந்த பேருந்து நிலையங்கள் நகரின் மையப்பகுதியாக மாறிவிட்டன.

இதனால் அதன் நில மதிப்பு உயர்ந்து மக்கள் அதிகம் புழங்கும் இடமாக மாறியுள்ளன. ஏராளமான வணிக வளாகங்களும் சுற்றிலும் இருப்பதால் மக்கள் வந்து செல்ல வசதியாக பேருந்து நிலையங்கள் சேவையாற்றி வருகின்றன.

அந்த வகையில் வணிக பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையங்களில் முதன்மையானது சென்னை தியாகராய நகராகும். சென்னையின் நெரிசல் மிகுந்த கட்டமைப்புக்கு தலைநகர் டெல்லியை முன்மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டது தான் தியாகராய நகர்.

தீபாவளி, பொங்கல் என்று விழாக்கால நாட்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் இங்கு திருநாள்தான். சென்னைக்குப் புதிதாகவந்தவர்கள் ஒருமுறையாவது சுற்றிப்பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் இடங்களில் இந்த தியாகராய நகரும் ஒன்று. ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’யில் இந்த தியாகராய நகர் வாழ்வளித்த குடும்பங்கள் பல என்று தான் சொல்ல வேண்டும்.

இங்குள்ள மாம்பலம் ரயில் நிலையம், ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா, பாண்டிபஜார், சத்யாபஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிக பகுதிக்கு மையமாக இருப்பது தியாகராய நகர் பேருந்து நிலையமே. 35 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளை இணைக்கும் வகையில் கோயம்பேடு, மயிலாப்பூர், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பிராட்வே, கோவளம், போரூர், பூந்தமல்லி உட்பட பல்வேறு வழித்தடங்களில் 480-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேவைக்கு ஏற்றபடி, கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாட்களில் அதிகபட்சமாக 2,000 பேருந்து சேவைகள் வரை அதிகரித்து இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிலையத்துக்கு தினமும் சுமார் 55 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்துடன் கூடிய வணிக வளாக பகுதியையும் சேர்த்து அமைக்கும் திட்டத்தில் அரசு உள்ளது. அந்ததிட்டம் வரும்போது வரட்டும். தற்போது அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அங்கு வரும் பயணிகள் கூறுகின்றனர். கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தாலும், அவற்றைபோதிய அளவில் ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் அசோக் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தியாகராய நகர் வழியாக பயணம் செய்து வருகிறேன். இங்கு தற்போது தான் முறையாககழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு அத்துடன் 2 கழிப்பறைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பொது கழிப்பறைகள் அவ்வப்போது தான் தூய்மைப்படுத்தப்படுகின்றன. இங்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கைக்கு இங்கு கழிப்பறைகள் போதுமானதாக இல்லை.

இது தவிர்த்து இரண்டு டேங்குகளில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு டேங்கில் குழாய் உடைந்திருப்பதால், தண்ணீர் பிடிக்க முடியவில்லை. இவ்வாறுஅடிப்படை வசதி ஏற்படுத்தி தந்தாலும், அவை போதுமானதாக இருக்கிறதா என்பதை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் உறுதி செய்வதோடு, அவற்றின் மீது தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே மக்கள் பயனடைவர்.