ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ள ‘அயலி’ இணையத் தொடரை இயக்குநர் மிஷ்கின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்‌ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர் தர்மராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியான தொடர் ‘அயலி’. இந்தத் தொடருக்கு வீணை மைந்தன், சச்சின், முத்துகுமார் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர்.

ரேவா இசையமைத்திருக்கும் இத்தொடருக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத் தொடர் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இதன் கதைக்களம் ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, சுவாரஸ்யமான திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ‘அயலி’ தொடரை இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் ‘அயலி’ பற்றிய பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது. இயக்குநருக்கும் ஜீ5 குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.