1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதிநடந்தது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம். இதை தற்போதுள்ள தலைமுறையினர் மறந்திருந்தாலும், இச்சம்பவத்துக்குக் காரணமான பின்னி ஆலையை யாரும் மறந் திருக்க வாய்ப்பில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியில், பின்னிஅண்டு கோ நிறுவனத்தால் அப்போதைய சென்னை மாகாணத்தில் பெரம்பூர் பட்டாளம் பகுதியில் 1876-ல் தொடங்கப்பட்டது பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் (பி அண்டு சி)ஆலை. மக்கள் நெருக்கடி இல்லாதஅப்பகுதியில் 254 ஏக்கரில் அந்தகாலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையில், ராணுவத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட இந்த ஆலை, தனக்கான மின்சாரத்தை அங்கேயே உற்பத்தி செய்து, பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை அப்போதைய அரசுக்கும், தனியாருக்கும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட முக்கியமான விஷயம், இந்த ஆலை வளாகத்தில் 32 ஏக்கர் பரப்பில் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளும் கட்டித் தரப்பட்டிருந்தன.

சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், கடந்த 1921-ம்ஆண்டில் தொழிலாளர்கள் விடுப்புஎடுத்ததற்காக அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய போராட்டமாக மாறி, இறுதியில் துப்பாக்கிச்சூடு அளவுக்குச் சென்றது. முன்னதாக 1918-ம் ஆண்டில் இந்த ஆலையில் தொழிலாளர் சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ உருவாக்கப்பட்டது. அதில்முக்கியமானவர் ‘திருவிக’ என்றழைக்கப்படும் வி.கல்யாணசுந்தரம்.

தொடர் போராட்டங்கள்

1920-ம் ஆண்டு இறுதியில் முதலில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர் தொழிலாளர்கள். இதற்கு, அப்போதிருந்த பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின், 1921-ம் ஆண்டு மே மாதம் கர்நாடிக் ஆலையின் நூற்பாலை பிரிவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தத்தை அறி வித்தனர்.

மே 20-ம் தேதி கர்நாடிக் ஆலைபணியாளர்களுக்கு ஆதரவாக பக்கிங்காம் ஆலை தொழிலாளர்களும் இறங்க, போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய அரசும் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டதால், காவல்துறையின் உதவி கொண்டு போராட்டத்தை அடக்கி வந்தது.

இதற்கிடையே, ஆலையில் பணியாற்றி வந்த ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதியாக செயல்பட்ட எம்.சி.ராஜா அறிவித்தார். இதனால், அவர்கள் பங்கேற்கவில்லை. ஆலையும் ஜூலை 11-ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

முன்னதாக, ஜூலை 10-ம் தேதிஇந்திய தேசிய காங்கிரஸ் சார்பில்நடத்தப்பட்ட கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு ராஜாஜியும் ஆதரவளிக்க போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்த காவல்துறை மூலம் பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்பட்டன.

ஜூலை 14-ம் தேதி ஆலையில் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்த அரசு உத்தரவின் பேரில்காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். ஆயுதம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. அடுத்த 2 தினங்களில் இரு ஆலைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், பொதுமக்கள் மத்தியிலும் ஆலை தொழிலாளர்கள் மீது கரிசனம் உருவானது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற போராட்டத்தைப் போல், 1921-ம் ஆண்டு ஜூலை 18-ம்தேதி சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் கடற்கரையில் கூடி தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய நிகழ்வும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்த நிலையில், ஆக.26-ம் தேதி ஆலையில் பணியாற்றிய ஒரு பிரிவு தொழிலாளர்கள் மீது, போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு பிரிவினர் கற்கள் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவங்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்த நிலையில், ஆக.26-ம் தேதி இரவு,புளியந்தோப்பு பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஒரு குழு, அங்கிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்துஆக.29-ம் தேதி மீண்டும் போராட்டம் வெடித்தது. இருதரப்பினர் மோதிக்கொள்ள இருந்த நிலையில், காவல்துறையினர் மீது நடந்த தாக்குதலை தடுக்க, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில்,7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் உலகத்தம்மாள் என்ற பெண்ணும் ஒருவர். 17-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த ஆலையின் வரலாற்றில் நீங்காத வடுவாக அமைந்தது. தொடர்ந்து, ஆலையை தொடர்புபடுத்தி பல்வேறு நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகின.

வேலை நிறுத்தம் இறுதியாக 1921-ம் ஆண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த ஆலை, கடந்த 1969-ம்ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆலை தனியாருக்கு வழங்கப்பட்டது. அதன்பின் 1996-ம் ஆண்டு ஆலையை நடத்த முடியாத தனியார் நிறுவனம், நிரந்தரமாக ஆலையை மூடிவிட்டது.

தற்போது இந்த ஆலை இருந்த இடம் மிகப்பெரிய குடியிருப்பாக மாறிவருகிறது. இருந்தாலும், இந்த ஆலையின் 100 ஆண்டு வரலாற்றை அறிந்தவர்கள், 1921-ம்ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வின் 100-வது ஆண்டு நினைவு தினம் இன்று..!