தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்துமக்கள் நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி (திங்கள்) என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்துஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. அதேபோல் ஆம்னி பேருந்து நிலையங்களில் இருந்தும் வழக்கத்தைவிட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடர் விடுமுறையால் நேற்று மாலை முதல் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து பல்வேறுஊர்களுக்கு 300-க்கும் மேற்பட்டசிறப்பு பேருந்துகளை இயக்கினோம். விடுமுறை முடிந்து மக்கள்சென்னைக்கு திரும்ப வசதியாக போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.