மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கான 10 அறிஞர்கள், விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, 2010-ம் ஆண்டுக்கான விருதை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ.எஸ்.ராஜம் பெறுகிறார்.

மேலும், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்.கோதண்டராமன் (2011), தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியரும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவருமான இ.சுந்தரமூர்த்தி (2012), புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநரும் புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான பேராசிரியர் ப.மருதநாயகம் (2013),சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையத்தின் முன்னாள்தலைவர் பேராசிரியர் கு.மோகனராசு (2014) ஆகியோரும்,

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (2015), புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் கா.ராஜன் (2016), ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (2017), சென்னை புதுக் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2018), தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரி மற்றும் நெல்லை திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கு.சிவமணி (2019) ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், ‘கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’க்கு தேர்வு செய்யப்பட்ட 10 அறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here