சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்
இது குறித்து மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முதல்வர், பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
முதல்வர், கடந்த 20.7.2023 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இம்மாநில மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று முதல்வர் ஆகஸ்ட் 18ம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.