மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அவரின் உருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு எனப் புரட்சிகரமான பாடல்களை எழுதினார்.

மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று அவரின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை, மெரினா காமராசர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ.வேலு, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், ’’பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்’’ என்பது உள்ளிட்ட 14 அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.