பிரிட்டன் வருகை தரும் பயணிகளுக்கு கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் இன்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்எஸ் ஷர்மாவை சந்தித்து பேசினார்.

உலக சுகாதார அமைப்பானது, ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகரித்துள்ளது.

இதனால் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா, போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.

கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு இனவெறி செயல் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்து இருந்தார். பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி அங்கீகரிக்கப்படாதது பாரபட்சமான செயல், இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கும் உரிமை நமக்கு உண்டு என வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்த்தன் சிரிங்கலா கூறியிருந்தார்.

இந்தநிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை பட்டியலை பிரிட்டன் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ட்ராஜென்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் கரோனா வைரஸ் தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது. எனினும் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான சிக்கல் காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இந்தியர்கள் இன்னும் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் இன்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்எஸ் ஷர்மாவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பினரும் சான்றிதழ் வழங்குவதில் தொழில்நுட்பக் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கவில்லை.