அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம், சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் கொலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைநே்திரபாபு, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்விரோதம் தொடர்பான உளவுத் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார் அளிக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல், அவர்களது தேவைகள் அறிந்து செயல்பட வேண்டும். பெண்கள், முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.