கரோனா தடுப்பூசி போடுவதில், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பெட்ரோல் பங்க்-களும் 1,600 கேஸ் ஏஜென்சிகளும் உள்ளன.

வீடுவீடாக விநியோகம்

பெட்ரோலியப் பொருட்கள் அத்தியாவசிய துறையின் கீழ் வருவதால், பெட்ரோல் பங்க்மற்றும் கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் கரோனா தொற்று பரவலைபொருட்படுத்தாமல் சிலிண்டர்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்வதோடு, பெட்ரோல், டீசலையும் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, ஊழியர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின்அறிவுறுத்தலின்படி, முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேசமயம், பெட்ரோல் பங்க், சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளஊழியர்களில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவாக உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிபோட வேண்டும் என, தமிழ்நாடுபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை, சுகாதாரத் துறைக்கு பெட்ரோலியத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.