சொத்து வரி உயர்வு விஷயத்தில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று திமுக அமைப்பு செயலாளர்ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட வகை, பரப்பளவுக்கு ஏற்ற வகையில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், மானியம் பெறுவதற்கு சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுநிபந்தனை விதித்ததால்தான்சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தேர்தல் வாக்குறுதி

முன்னதாக, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது.அதில் 487-வது வாக்குறுதியில், ‘கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரிஅதிகரிக்கப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக ஏமாற்றுவதாக கூறி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளன.

இந்த சூழலில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது என்றுகூறிவிட்டு, தற்போது அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறித்து திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இறுதி முடிவுக்கு இன்னும் அரசு வரவில்லைஎன்றே நினைக்கிறேன். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப் பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என்று நினைக்கிறேன். இதுகுறித்து முதல்வரும் அமைச்சர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளார். பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.