பணி நிரந்தரம் செய்யக் கோரி 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால், 2019-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(எம்ஆர்பி) மூலம் நடத்தப்பட்டதேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் பட்டனர்.

இந்த நிலையில், சில மருத்துவமனைகளில் பணிபுரிந்துவரும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பணியமர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எம்ஆர்பி செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கரோனா பேரிடர் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறோம். ஆனால்,அரசு எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்காமல் அலைக்கழிக்கிறது. தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் எங்களை பணியமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதை கைவிட்டு, உடனடியாக எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். .கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ‘கரோனாவுக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று ட்விட்டரில் அப்போதுவலியுறுத்தி இருந்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், டிஎம்எஸ் வளாகத்துக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர் கூறியபோது, ‘‘கரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அரசு கருதவேண்டாம். அது இன்னும் தொடரவேண்டும். தொற்று எண்ணிக்கைகுறைந்துள்ளதால், செவிலியர்களின் பணி முடிந்துவிட்டதாக கருதி அவர்களை சிதறடிப்பது நியாயம் அல்ல. இவர்களின் கோரிக்கை நியாயமானது. எனவே, செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம்நேற்று இரவும் தொடர்ந்தது. ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டு, அருகே உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டனர். வலிப்பு வந்ததாலும், மயங்கி விழுந்ததாலும் 3 செவிலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.