3 மாதங்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
வாரம்தோறும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது முதல்வர் ஸ்டாலினின் வழக்கம். அவர் கடைசியாகக் கடந்த ஜூலை 4-ஆம் தேதி முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 25-ம் தேதி) முதல்வர் ஸ்டாலின், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார். முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரையான முதல்வர் பயணத்தில், அப்பகுதி மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் பயணத்தை ஒட்டி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. இதுதொடர்பான காணொலி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாகச் சென்னை, அடையாறு தியாசாபிகல் சொசைட்டி வளாகத்தில் காலை நேரத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த மக்களுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.