சென்னை: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் பொதுவான நிலையாணையை அமல்படுத்தக் கோரிபோக்குவரத்துத் துறை செயலருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலையாணை அடிப்படையில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொது நிலையாணை வேண்டும் என தொழிற்சங்கங்களால் கடந்த 1995-ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையொட்டி, நிர்வாகங்கள் முன்வரைவு நிலையாணையை தொழிலாளர் ஆணையர் முன்பு சமர்ப்பித்தன.
தொழிலாளர் ஆணையர் தொழிற்சங்கங்களை அழைத்து கருத்துகளை பெற்ற பின்பு, அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்குமான நிலையாணையை சான்றிட்டார். இந்த நிலையாணைகளில் உள்ள பல்வேறு சரத்துகள் சம்பந்தமாக சம்மேளனத்தின் சார்பில் சென்னை முதலாவது தொழிலாளர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் கடந்தஆண்டு தொழிலாளர் நீதிமன்றம்இறுதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, நிலையாணைகள் முழுமையாக அமலுக்கு வந்துவிட்டன.
ஆனால், நிர்வாகங்கள் தங்களதுநிறுவனங்களில் உள்ள பழையநிலையாணைகளையே செயல்படுத்தி வருகின்றன. இது சட்டப்படிசரியல்ல. மேலும், பழைய நிலையாணைகளின்படி நிர்வாகங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. நீதிமன்றம் பகுதியாக அனுமதித்த சரத்துகள் உட்பட அனைத்து சரத்துகளையும் உள்ளடக்கி சான்றிடப்பட்ட நிலையாணையை அனைத்துபோக்குவரத்துக் கழகங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.