காலநிலை மாற்றம் மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘காலநிலை மாற்றம் மற்றும் கரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

“எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவையும் ஆற்றலையும் சிந்தனையையும் செயல்பாட்டையும் போற்றும் அரசாக திமுக அரசு எப்போதும் இருந்துள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், ‘இந்து’ ராம், 1989-ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதனை அழைத்துக் கொண்டு தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வந்தார்.

அப்போது, சென்னையில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க இருப்பதாகச் சுவாமிநாதன் தலைவர் கருணாநிதியிடம் சொன்னார். வேறு எந்த மறுப்பேதும் சொல்லாமல், உடனடியாக அடுத்த வினாடியே அது வழங்கப்படும் என்ற உறுதியைத் தந்து, அந்த இடத்தை வழங்கியவர்தான் கருணாநிதி.

அந்த இடத்தில், நிலத்தில்தான் இந்த ஆராய்ச்சி நிறுவனம் சீரும் சிறப்புமாகத் தனது 32-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உதவி செய்தால், அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்படும் என்ற தொலைநோக்கோடு சிந்தனையோடு எண்ணிப்பார்த்து முதல்வர் கருணாநிதி அன்றைக்கு இந்த நிறுவனம் உருவாக உதவி செய்தார்.

1989 – 91 மற்றும் 1996 – 2000 ஆண்டுகளில் மாநிலத் திட்டக்குழுவில் சுவாமிநாதனை நியமித்த முதல்வர் கருணாநிதி அவரது ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு, ஆட்சியிலே பல திட்டங்களை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.

இங்கு நடந்த பல்வேறு விழாக்களில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். சுவாமிநாதனின் 85-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தலைவர் கருணாநிதி, ‘100 ஆண்டுகாலம் வாழ்க’ என்று வாழ்த்தினார். அந்த வாக்கு பலித்து, நூற்றாண்டு விழாவை நம்முடைய சுவாமிநாதன் நெருங்கி வருகிறார். தலைவர் கருணாநிதியின் வழித்தடத்தில் நானும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளேன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானியாக மட்டுமல்ல, தமிழ் வேளாண் விஞ்ஞானி என்பதற்கும் எடுத்துக்காட்டாக இந்த நிறுவனத்தையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அமைத்தார். 2010-ம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்தியபோது சுவாமிநாதனின் ஆலோசனைப்படி தமிழகத்தில் ஐந்து நகரங்களில் மரபுவழிப் பூங்காக்களை அமைத்தோம். தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் நிலத்தையும் மதிக்கும் அரசாகத்தான் திமுக அரசு எப்போதும் இருக்கும்.

வருகிற 13-ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறோம். இந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை வருகிற 14-ம் தேதி தாக்கல் செய்யப் போகிறோம். வேளாண்மைதான் உயிராக, உடலாக நம் நாட்டுக்கு இருக்கிறது. அந்த வேளாண்மைக்குச் சிறப்புக் கவனம் தர இருக்கிறோம்.

* விவசாயத்துக்கெனத் தனியான நிதிநிலை அறிக்கை

* இயற்கை வேளாண்மைக்குத் தனிக் கவனம்

* உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல்

* கிராமச் சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள்.

* நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம்.

* சென்னைப் பெருநகரத்தை வெள்ள நீர் சூழாமல் தவிர்க்க ‘பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு

ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க இருக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாக இந்த அமைச்சரவையில்தான் நீர்வளத்தைப் பாதுகாப்பதற்காகத் தனியாக, நீர்வளத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்துறை அமைச்சரை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சராக உருவாக்கி உள்ளோம். சுற்றுச்சூழல் அமைச்சரை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக நாங்கள் நியமித்திருக்கிறோம். அதாவது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நீர் நிலைகள், வேளாண்மை, உழவர் நலன் ஆகிய துறைகளைத் தமிழக அரசு எந்தளவு உன்னிப்பாகக் கவனிக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் தெளிவாக உணரலாம்.

‘வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயர்வான்’

என்ற தமிழ் நெறியை முழுமையாக உணர்ந்த அரசாகத் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

பசிப்பிணி ஒழிப்பும் உணவுப் பாதுகாப்பும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இருப்பது நாடு என்கிறார் வள்ளுவர். அத்தகைய பசிப்பிணி போக்குவதை இலக்காகக் கொண்டு சிந்திக்கவும் ஆராய்ச்சிகள் செய்யவும் தங்கள் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாகத் தனது சிந்தனையை இத்தகைய திட்டங்களுக்காக ஒதுக்கி உழைத்து வருகிறார் சுவாமிநாதன். உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இதுவரை அவரது வழிகாட்டலில் 86 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள் என்பதையும்; மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை அவர் வளர்த்து வருவதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இதைவிட முக்கியமாக, பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்காகத் தொடுதல் – நுகர்தல் பூங்கா அமைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்.

இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து சொன்ன அறிஞர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன். காலநிலை மாற்றம் குறித்து 1969-ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பம் ஆவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

இன்று காலநிலை மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வெப்பச் சலனம் அதிகமாகி வருகிறது. வடமாநிலங்கள் சிலவற்றில், பல நேரங்களில் வெப்ப அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது. உலகின் ஒரு சில பகுதிகள் ‘வெட் பல்ப் டெம்பரேச்சர்’ (wet-bulb temperature) தன்மையை எட்டிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல் தன்னைத்தானே குளிர்விக்கும் தன்மையை இதனால் இழக்கும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். சீரான பருவம் என்பது குறைந்து வருகிறது. பருவ மழைக்காலம் என்பது கூட வரையறுக்க முடியாததாக இருக்கிறது.

காலநிலை மாற்றம் என்பதை மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகத் தமிழக அரசு கருதுகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கொள்வோம். இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர்செய்யும் கடமை நமக்கு உள்ளது. இதற்கான ஆலோசனைகளைச் சூழலியல் அறிஞர்கள் அனைவரும் அரசுக்குத் தாருங்கள். திறந்த மனத்தோடு அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியையும் அளிக்கிறேன்.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதையும், விவசாயம் செய்யும் பரப்பை அதிகப்படுத்துவதிலும் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. வேளாண்மையை லாபகரமான தொழிலாக வ்வசாயிகள் கருதும் சூழலை உருவாக்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அதே நேரத்தில், உரிய விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த விலை எப்படிக் கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்கு உணர்த்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தான். உணவுப் பாதுகாப்பு என்பதில் விவசாய மக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கும். மண்ணைக் காக்க வேண்டுமானால், மண்ணைக் காக்கும் மக்களைக் காக்க வேண்டும்! அதை நோக்கியதாக உங்களது சிந்தனைகள் அமையட்டும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.