4 கோடி ரூபாய் செலவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மரபணு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பது உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கண்டறிவதற்காக, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது இந்த ஆய்வுக் கூடத்தில் பணிபுரிய கருணை அடிப்படையில், 91 பேருக்கு பணி நியமன ஆணையும் முதலமைச்சர் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் மற்றும் அதன் தன்மை குறித்து முழு மரபணு பகுப்பாய்வு செய்யவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவுதலை கண்டறிய உதவும் மரபணு பகுப்பாய்வு கூடம் 4 கோடி ரூபாய் செலவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் இல்லாததால், அதனை கண்டறிய ஹைதராபாத் அல்லது புனேவில் உள்ள ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு வருகின்றது. இதனால், சோதனை முடிவுகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த வைரஸை கண்டறியும் மரபணு பரிசோதனை ஆய்வகத்தை அமைக்க ஏற்படு செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் மருத்துவத்துறை சார்பில் 4 கோடி ரூபாய் செலவில் ஆய்வகம் அமைக்க சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குநர் வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து தேவையான கருவிகள் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் ஒரு நேரத்தில் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான திறன் உள்ளது. இதன் முடிவுகள் ஒரு வாரத்துக்குள் கிடைத்து விடும்.

பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய இந்த யூனிட்டை இயக்குவதற்காக மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தின் சார்பில் 6 பேர் கொண்ட குழுவினர் பெங்களூருவில் பிரத்யேக பயிற்சியை முடித்து தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் பணிபுரிவதற்காக மேலும் 4 பேர் என மொத்தம் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தொற்று எந்த வகையை சேர்ந்தது என உடனுக்குடன் கண்டறிந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சிகிச்சை முறைகளையும் மாற்றியமைக்க இது ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில், தமிழ்நாடு மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மாதிரிகளையும் பரிசோதனை செய்ய முடியும். கொரோனா வைரஸ் மாதிரிகள் மட்டுமின்றி, டெங்கு, சிக்கன் குனியா குறித்தும், அதன் வீரியம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் இங்கே ஆய்வு செய்ய முடியும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் உருமாற்றத்தை கண்டறியும் 10 ஆய்வகங்கள் செயல்பட்டில் உள்ளன. இதுபோன்ற ஆய்வகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், முதல் முறையாக தமிழ்நாட்டில், மாநில அரசு சார்பில் மரபணு பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.