காலநிலை மாற்றம் தொடர்பாக ஐபிசிசி அறிக்கையை முன்வைத்து தமிழகம் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவின் (Intergovernmental Panel on Climate Change: IPCC) அறிக்கை தனது ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதியை எட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட “AR6 Synthesis Report: Climate Change 2023” என்றழைக்கப்படும் தொகுப்பு அறிக்கை, புதைபடிம எரிபொருள் பயன்பாடு, அதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, தவறான நிலப்பயன்பாடு ஆகியவற்றால் புவியின் சராசரி இயல்பு வெப்பநிலை 1.1°C அளவுக்கு உயர்ந்து விட்டதை உறுதிபடுத்தியுள்ளது.
இந்த வெப்பநிலை உயர்வால் வெள்ளம், கனமழை, வறட்சி, புயல், காட்டுத்தீ போன்ற மிகத் தீவிரமான வானிலை நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டு இயற்கையையும் உலகின் அனைத்துப் பகுதிகளில் வாழும் மக்களையும் பாதித்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், புவி வெப்பமடைதலைத் தடுக்க இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் தற்போதைய திட்டங்களால் 2030ம் ஆண்டுக்குள் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5 செல்சியஸ் அளவுக்கு உயர்வதை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதன்படி, இந்திய அரசின் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் எதுவுமே பெருமளவில் பலனளிக்கக் கூடியவையாக இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கை தயாரிப்பில் பங்களிப்பை அளித்துள்ள ஆசிரியரும் (lead author), இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் பாசிலி என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குனருமான அஞ்சல் பிரகாஷ், தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் விவசாயம் சார்ந்த மாநிலம் ஆகும். காலநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும், உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படும். தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடலுக்கு அருகில் உள்ளது. கடல் மட்டம் உயர்வு, கடல் அரிப்பு காரணமாக கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். உட்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்படும்.
இதற்கு தீர்வு காண பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைக்க வேண்டும். காலநிலைக்கு ஏற்ற உட்கட்டமைப்புகளை உருவாக்க அதிக அளவு முதலீடு செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.