கார் கதவை திடீரென திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளருக்கு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை செல்வபுரத்தை அடுத்த குமாரபாளையம் நேருகாலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் செல்வபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே கடந்த 2015 ஜூன் 6-ம் தேதி சைக்கிளில் சென்றார். அவருக்கு முன்னால்சென்ற காரின் கதவை அதன் ஓட்டுநரான செல்வபுரத்தைச் சேர்ந்த பிரமோத் (25), திடீரென திறந்துள்ளார். காரின் கதவு மோதிய தில் சுப்பிரமணியனின் தலையில் எலும்புமுறிவு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், 2015ஆகஸ்ட் 8-ம் தேதி உயிரிழந்தார். விபத்து நடந்த போது சுப்பிரமணியன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து மாதம் ரூ.30 ஆயிரம்வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
‘அவரது இறப்பால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என சுப்பிரமணியனின் மனைவி சாருமதி பாய், மகள் சர்மிலி பாய் ஆகியோர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, “பின்னால் வரு பவர்களை கவனிக்காமல் திடீரென கார் கதவை திறந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் அரசு மருத்துவமனை, தனியார்மருத்துவமனையில் சுப்பிரமணி யன் சிகிச்சை பெற்றுள்ளார்.அதன்பிறகு உயிரிழந்துள்ளார். எனவே, குடும்பத்துக்கான வருவாய்இழப்பு, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக ரூ.10.85 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் சேர்த்து, வாகனத்தின் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.