சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ நிவாரண முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் வெள்ளம் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் 50 வாகனங்கள் மூலம் சேவை வழங்கப்படவுள்ளது. இதில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், மழைக்கால நோய் மருந்துகளான தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரண களிம்பு உள்ளிட்ட மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

பேரிடர் கால பணி என்பதுகடினம்தான். சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ கலந்தாய்வுக்கு பின்னர், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். டிசம்பர் மாத இறுதிக்குள் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைப்பார்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைஇயக்குநர் கணேஷிடம் கேட்டபோது, “அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆராய்ச்சிக் கட்டிடம் சித்த மருத்துவப் பல்கலைக்கழகமாக மாற்றப்படுகிறது. இங்குதற்காலிகமாக பல்கலைக்கழகம் செயல்படும். மாதவரத்தில் 25 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது” என்றார்.