கொலிஜியம் முறை குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் தற்போது கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனினும், புதிய நீதிபதிகளை தேர்வு செய்வதில் அதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission or NJAC) மத்திய அரசு கொண்டு வந்தது. இதில், புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும், இந்த ஆணையத்தை கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு அரசு தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார். அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார். மேலும், நீதிபதிகள் வெளிக்காட்டிக் கொள்வதில்லையே தவிர, மற்றபடி நீதித்துறையில் தீவிரமான அரசியல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது என்றும், இந்தியாவில் மட்டும்தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்கிறார்கள் என தெரிவித்த கிரண் ரிஜிஜு, இவ்வாறு கூறுவதால் நீதிபதிகளை தான் விமர்சிப்பதாகக் கருதக் கூடாது என்றும் கொலிஜியம் முறை தனக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்தையே கூற விரும்புவதாகவும் குறிப்பிட்டார். எந்த ஒரு நடைமுறையும் முழு அளவில் சரியானதாக இருக்காது என்றும் அதேநேரத்தில், நாம் அதை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக கொலிஜியம் முறையை கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இதை அடுத்து, இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது என்ற செய்தியை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொலிஜியம் நடைமுறை குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. இதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கொலிஜியத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.