அழிந்து வரும் கழுகு இனத்தை பாதுகாக்கும் விதமாக உலகின் முதல் கழுகு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறக்கப்படவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த உலக கழுகு மையம் அமைந்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதை திறந்து வைக்கவுள்ளார். உலக கழுகுகள் தினமான செப்டெம்பர் 3ஆம் தேதி இந்த கழுகு பாதுகாப்பு மையம் திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினமாகும்.

முன்னதாக 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த பாதுகாப்பு மைய கட்டுமானத்திற்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். முதல்கட்டமாக இந்த திட்டத்திற்கு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1.06 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. ஜடாயு திட்டம் என்ற பெயரில் மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

முதல் கட்டமாக ஏழு ஜோடி ராஜாளி வகை கழுகுகள் இங்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. 2023-24இல் இதன் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டு, 15 ஆண்டுகளில் இங்கு 150 முதல் 180 கழுகுகளை வைத்து பராமரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இங்கு மருத்துவ மையம், பரிசோதனை மையம், சிசிடிவி கண்காணிப்பு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிட்டத்திற்காக அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.35 கோடி செலவிடப்படவுள்ளது.

கழுகு பாதுகாப்பு மையம்

பம்பாய் இயற்கை அறிவியல் மற்றும் விலங்குகள் ஆய்வு மையத்துடன் இணைந்து இந்த பாதுகாப்பு மைய திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு நடத்தவுள்ளது. இங்கு ஆசியாவைச் சேர்ந்த சிவப்பு தலை கழுகுகள் பாதுகாக்கப்படவுள்ளன. இதன் உயரம் 76 முதல் 85 செ.மீ உளன. சராஎசரி டை 3.7 கிலோவில் இருந்து 5.4 கிலோவாக இருக்கும். 2013-14ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 900 கழுகுகள் உள்ளன.

கழுகுகள்

1980களில் இந்தியாவில் மொத்தம் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில் இதன் எண்ணிக்கை 99.5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் கால நிலை அமைச்சகம் அதிர்ச்சிக்குரிய அறிக்கையை 2019ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. எனவே, கழுகு இனத்தை பாதுகாக்க அரசு சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.