குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதல்வர் ஸ்டாலின் தனித்தனியாக இரங்கல் கடிதல் எழுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
“கடந்த 8-12-2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 12 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு உடனடியாக குன்னூர் விரைந்த முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மீட்புப் பணிகளிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதல்வர் இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து எழுதிய கடிதத்தில்: இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும், இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெறவேண்டும் என தான் விழைவதாகவும் என குறிப்பிட்டிருந்தார்.”
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.