தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும், என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகளுக்கும்மேல் பணிபுரிந்து, நாட்டுக்கு சேவை செய்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத், தமிழ் மண்ணில் ஏற்பட்ட விபத்தில் உயிரை இழந்திருக்கிறார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அவருக்கும், அவரது மனைவி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும், நல்ல ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பது பாஜகவின் நோக்கம். தமிழகத்தில் ஆளும்கட்சி செய்யும் குறைகளைக் கண்டுபிடித்து, அதை மக்களிடம் கொண்டு சென்று, ஆளுங்கட்சியை திருத்தி, ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்லி வருகிறோம்.

ராமநாதபுரத்தில் இளைஞர் மணிகண்டன் மரணம் குறித்து அறிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்துள்ளோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில், ஆளும் கட்சி இன்னும் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையினருக்கு இன்னும் அதிகமாக பொறுப்புணர்வையும், சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும் என்றார்.