கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை தனது தலைமையில் எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவருமான டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. எனினும், முதல்வர் பதவிக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும், மூத்த தலைவர் சித்தராமையாவும் போட்டி போடுவதால், இறுதி முடிவை கட்சித் தலைமை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள டெல்லி வருமாறு சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று சித்தராமையா டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டி.கே. சிவகுமார் இன்று டெல்லி செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், “எனது தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வரை கட்சி மேலிடம் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒருமித்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.