நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் உள்ள 107 வயது நிறைந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்றை நேரில் வழங்கினார்.
அவரிடம் மருத்துவச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் ரொக்கம், மக்களைத் தேடி மருத்துவ பெட்டகம் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கூறியது: 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத் துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்று வழங்கி வருகின்றனர்.
1916-ல் பிறந்த கோபாலகிருஷ்ணன், 2-ம் உலகப் போர் நடந்தபோது இந்திய ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றியுள்ளார். சுங்கம், காவல் துறைகளிலும் பணியாற்றி 1972-ல் ஓய்வு பெற்றார்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.