கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ‘மகான்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஷ்ரேயஸ் கிருஷ்ணா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் ஆகியோர் பணிபுரிந்துளனர். இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்.10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இன்று (பிப் 03) ‘மகான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஓர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக விக்ரம் அமைதியாக பாடம் நடத்திக் கொண்டிருப்பதாக தொடங்குகிறது ட்ரெய்லர். வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவன் ஒருவன் விக்ரமின் கதாபாத்திரப் பெயரான ‘காந்தி மகான்’ என்பதை கட்டையான குரலில் கிண்டல் தொனியில் அழைக்கிறான். அடுத்த காட்சியில் விக்ரமின் மனைவியாக சிம்ரன். ‘சம்பளத்தில் 50 ரூபாய் குறைகிறது’ என மிடில் க்ளாஸ் குடும்பப் பெண்களின் குரலாக ஒலிக்கிறார். 49வது சுதந்திர தினம் என்று பின்னணியில் இருப்பதை பார்க்கும்போது விக்ரம் – சிம்ரன் தொடர்பான காட்சிகள் 90களில் பிற்பகுதியில் நடக்கலாம் என யூகிக்க முடிகிறது.

சமீபத்தில் வெளியான டீசரில் ‘ஆடுகளம்’ நரேன் தனது மகனான சிறுவயது விக்ரமிடம் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி ஒரு மகானாக வாழவேண்டும் என்று அறிவுறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக ட்ரெய்லரிலும் ஒரு வசனம் இடம்பெறுகிறது. ஆனால் காந்தி மகான் என்று பெயர் கொண்ட விக்ரம் அதற்கு நேரெதிராக மது, சூது என வாழ்ந்து கொண்டிருக்கிறார். மது ஒழிப்பு போராளியின் மகன் ஊருக்கெல்லாம் சாராயம் காய்ச்சிக் கொண்டிருப்பதாகவும் பாபி சிம்ஹா பேசும் வசனம் நமக்கு விக்ரமின் கதாபாத்திரத்தை விளக்க முயல்கிறது. இளமையான வின்டேஜ் விக்ரம், வயதான விக்ரம் என இரண்டு கெட்டப்களில் விக்ரம் வருகிறார். ட்ரெய்லரில் ஆங்காங்கே காந்தி சிலைகள் இடம்பெறுகின்றன.

அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ்வின் அறிமுகம். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் சாக்லேட் பாய் தோற்றத்தில் வந்தவர் இதில் ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் முரட்டுத்தனமாக தோற்றமளிக்கிறார். அப்பாவை வெறுக்கும் மகன் கதாபாத்திரம் போல காட்டப்படுகிறது. கேங்ஸ்டர் படங்களுக்கே உரித்தான கன் ஷூட்டிங், சேஸிங், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ட்ரெய்லரில் ஏகத்துக்கும் இதிலும் இடம்பெறுகின்றன. வழக்கமாக கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வலுவான அம்சங்களாக இருக்கும் இசை, ஒளிப்பதிவு, லைட்டிங் என அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் இப்படத்திலும் நிறைவாக இருக்கும் என்று ட்ரெய்லர் உறுதியளிக்கிறது.

ட்ரெய்லர் கொடுக்கும் இதே ஹைப் படத்திலும் தொடர்கிறதா என்பதை பிப்ரவை 10ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.