தமிழக காவல் துறையில் காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே விதமான அடையாள ‘லோகோ’ நாளை முதல் இடம்பெற உள்ளது. இதற்கான அறிமுக விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கிறார்.
தமிழகத்தில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிற சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படை தகுதிகளுக்கு ஏற்ப சீருடையில் நட்சத்திரம், வாள், அசோக சின்னம் போன்ற அடையாளங்கள் இருக்கும். எனினும், ஒட்டுமொத்தமாக ‘தமிழக காவல் துறை’ என்பதை குறிக்கும் வகையில், எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.
இந்த குறையை போக்கும் வகையில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ கூடுதலாக நாளை முதல் இடம்பெறுகிறது.
அதில், வில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி உள்ளிட்டவற்றுடன் ‘TAMILNADU POLICE’ (தமிழ்நாடு காவல்), ‘TRUTH ALONE TRIUMPHS’ (வாய்மையே வெல்லும்) என ஆங்கிலத்திலும், ‘காவல்’ என தமிழிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லோகோவும் இடம்பெறுகிறது.
இதை அறிமுகப்படுத்தும் விழா நாளை (ஜூலை 31) காலை 9.30 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல்வர் ஸ்டாலின், தலைமை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கெனவே, உத்தர பிரதேசம் (1952), டெல்லி (1954), மகாராஷ்டிரா (1961), ஜம்மு காஷ்மீர் (2003), திரிபுரா (2012), குஜராத் (2019), இமாச்சல பிரதேசம் (2021), ஹரியாணா (2022), அசாம் (2022) ஆகிய 9 மாநிலங்களில் இதேபோல மாநிலத்தின் பெயரை குறிக்கும் வகையில் போலீஸ் சீருடையில் லோகோ உள்ளது.அந்த பட்டியலில் 10-வதாக தமிழகம் இணைந்துள்ளது.
தமிழக போலீஸாருக்கு இதற்கான அனுமதி கடந்த 2009-ம் ஆண்டிலேயே கிடைத்தாலும், நாளைமுதலே இது நடைமுறைக்கு வர உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.