பயிற்சிகளுக்கு பின்னரும் உள்மதிப்பீடு சோதனையில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட 400 தொடக்கநிலை ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக தகவல்தொழிநுட்ப சேவை நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம், சமீப வாரங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள், அமேசான், இந்திய நிறுவனமான ஸ்வீகி நிறுவனங்களின் வரிசையில் விப்ரோவும் இணைந்துள்ளது.
இதுகுறித்து விப்ரோ அளித்துள்ள அறிக்கையில், “மதிப்பீட்டு செய்முறை என்பது நிறுவனத்தின் வணிக நோக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை போன்றவைகளுடன் ஊழியர்களை சீரமைப்பதற்கான மறுமதிப்பீடுகளை உள்ளடக்கியது. இந்த விரிவான மற்றும் முறையான செயல்மதிப்பீட்டு முறையின் தொடர்ச்சியான செயல்பாடு ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் மறுபயிற்சியளிக்கவும், சில நேரங்களில் சில ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து நீக்கவும் வழிவகுத்துவிடுகிறது. பயிற்சிகளுக்கு பின்னரும், மதிப்பீடு செயல்பாடுகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்ட 452 புதிய ஊழியர்களை நாங்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அவர்களின் பயிற்சிக்கான கட்டணமாக ரூ.75,000 செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக நிறுனம் தெரிவித்துள்ளது என்று ஆங்கில நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரத்தில் விப்ரோ நிறுவனம் 2022ம் ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டிற்கான ஒருங்கிணைந்த நிகர லாபம் எதிர்பார்த்ததைவிட 208 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவித்தது. மேலும், உலகலாவிய தலையீடு இருந்தபோதிலும், நான்காவது காலாண்டிற்கான பதிவு வலுவாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது.
இருந்தபோதிலும், நடப்பு காலாண்டில், வாடிக்கையாளர்களின் தாமதமாக முடிவெடுக்கும் நிலையினால் அதன் வருமானம் குறையக்கக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பெருந்தொற்று பரவல் காலத்தில் ஏற்றத்தில் இருந்த இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை, தற்போது அதிகரித்து வரும் உலக மந்தநிலை அச்சம் காரணமாக, செலவைக்குறைத்தல் அல்லது முடிவெடுப்பதில் தாமதம் ஆகியவற்றுடன் போராடி வருகிறது.